நடுக்கடலில் பிடிபட்ட ரூ.5 கோடி கடல் அட்டைகள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டது 3 பேர் கைது


நடுக்கடலில் பிடிபட்ட ரூ.5 கோடி கடல் அட்டைகள் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டது 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2020 4:00 AM IST (Updated: 30 Aug 2020 10:50 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் அருகே நடுக்கடலில் பிடிபட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் தூத்துக்குடிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பல் அபிராஜ் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டது. ராமாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சென்றபோது, ஒரு நாட்டுப்படகில் சந்தேகப்படும்படியாக 3 பேர் வந்தனர். இதனை பார்த்த கடலோர காவல்படையினர் அந்த படகை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

அதில், அந்த படகில் சுமார் 1,000 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் 34 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக கடலோர காவல்படையினர் படகில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் மண்டபம் தங்கச்சி மடத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் எட்வர்டு என்ற பிரான்சிஸ்(வயது 50), மேற்கு தெருவை சேர்ந்த செய்யது மகன் சதக் அப்துல்லா (45), வேதாளையை சேர்ந்த ஜெகதீஷ்(44) என்பது தெரியவந்தது. அவர்கள் வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த செய்யது காசிம்(55) என்பவருக்கு சொந்தமான படகில் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடலோர காவல்படையினர் 3 பேரையும் கைது செய்தனர். படகில் இருந்த 1,000 கிலோ கடல் அட்டை மற்றும் படகையும் பறிமுதல் செய்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story