மாவட்ட செய்திகள்

சேலம் மண்டலத்தில், இன்று முதல் 50 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கம் + "||" + In the Salem region, 50 per cent of government buses are in operation from today

சேலம் மண்டலத்தில், இன்று முதல் 50 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கம்

சேலம் மண்டலத்தில், இன்று முதல் 50 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கம்
சேலம் மண்டலத்தில் இன்று முதல் 50 சதவீதம் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அரசு பஸ்கள் அந்தந்த பணிமனைகளில் 5 மாதத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர், ஜான்சன்பேட்டை, மணக்காடு, எருமபாளையம் உள்பட 23 அரசு போக்குவரத்து பணிமனைகளில் நேற்று காலை முதல் பஸ்கள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது. மேலும், சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களால் தூய்மை செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பஸ் நிலையங்களில் உள்பகுதியிலும், வெளிப்புறங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல்லில் உள்ள 1,047 பஸ்களில் 50 சதவீதம் பஸ்களை முதற்கட்டமாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பஸ்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முதற்கட்டமாக 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படும். பஸ்களில் ஏறும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் பஸ்களில் ஏற அனுமதிக்கப்படமாட்டாது. டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் முககவசம் அணிவதோடு கைகளில் கையுறை அணிந்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது சேலம் மாவட்டத்துக்குள் மட்டும் பஸ் போக்குவரத்து இயக்கப்படும், என்றனர்.

சேலத்தில் இருந்து தலைவாசல், ஆத்தூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, அயோத்தியப்பட்டணம், ஓமலூர், தாரமங்கலம், ஏற்காடு, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வருகையை பொறுத்து மேலும் கூடுதலாக பஸ்களை இயக்கவும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.