மாவட்ட செய்திகள்

திண்டிவனம் அருகே, 7 அடி குழிதோண்டி குடிநீர் பிடிக்கும் கிராம மக்கள் - இந்த நிலை மாறுமா? + "||" + Villagers near Tindivanam digging 7 feet for drinking water - will this situation change?

திண்டிவனம் அருகே, 7 அடி குழிதோண்டி குடிநீர் பிடிக்கும் கிராம மக்கள் - இந்த நிலை மாறுமா?

திண்டிவனம் அருகே, 7 அடி குழிதோண்டி குடிநீர் பிடிக்கும் கிராம மக்கள் - இந்த நிலை மாறுமா?
திண்டிவனம் அருகே 7 அடி குழிதோண்டி கிராம மக்கள் குடிநீர் பிடிக்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும்? என்று கிராம மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
திண்டிவனம், 

திண்டிவனம் அருகே மொளசூர் கிராமம் உள்ளது. மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட இந்த கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. 3 திறந்த வெளி கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 6 தெருக்களுக்கு குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் அந்த தெருக்களை சேர்ந்த மக்கள், பக்கத்தில் உள்ள தெருக்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இதற்கு பக்கத்து தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே குடிநீர் பிடிப்பதில் கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் 6 தெரு மக்களும் குடிநீர் பிடிக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர். அதில், ஒவ்வொரு தெருக்களிலும் 7 அடி ஆழத்திற்கு குழிதோண்டி குடிநீர் பிடிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி தெருக்களில் 7 அடி ஆழத்திற்கு ஆங்காங்கே குழி தோண்டினர். தினமும் அந்த குழிக்குள் ஒருவர் இறங்கி விடுவார். அவர் உள்ளே நின்றபடி குழாயில் குடிநீரை பாத்திரத்தில் பிடித்து, மேலே இருப்பவர்களுக்கு கொடுப்பார்.

இவ்வாறுதான் அந்த 6 தெரு மக்களும் குடிநீரை பிடித்து வருகிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரைதான் குழாயில் தண்ணீர் வருமாம். அந்த ஒரு மணி நேரத்துக்குள் குடிநீர் பிடித்தால் தான் உண்டு. இல்லையெனில் அருகில் உள்ள விவசாய நிலத்துக்குத்தான் செல்ல வேண்டும். குடிநீர் பிடிப்பதற்கான இந்த போராட்டம், கிராம மக்களின் நிலை எப்போது தீருமோ? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

குறிப்பிட்ட 6 தெருக்களுக்கு மட்டும் குடிநீர் செல்லாதது ஏன்? என்பது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்த குடிநீர் குழாய் பதித்து பல ஆண்டுகள் ஆகிறது. அதனை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் குழாயில் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 6 தெருக்களும் மேடான பகுதியில் உள்ளது. இதனால் குடிநீர் சரியாக வரவில்லை. இது குறித்து மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். மொளசூர் கிராம மக்களின் இந்த நிலை மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.