அரியலூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடின, பஸ் நிலையங்கள் கூட்டமின்றி காணப்பட்டன


அரியலூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடின, பஸ் நிலையங்கள் கூட்டமின்றி காணப்பட்டன
x
தினத்தந்தி 1 Sep 2020 10:30 PM GMT (Updated: 2 Sep 2020 12:37 AM GMT)

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரசு பஸ்கள் ஓடின. ஆனால் பயணிகள் குறைவாகவே வந்ததால் பஸ் நிலையங்கள் கூட்டமின்றி காணப்பட்டன.

அரியலூர், 

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கின் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

அதன்படி அரியலூர் மாவட்டத்திலும் நேற்று பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் நகர பஸ்கள் என 20 பஸ்கள் ஓடின. முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பயணிகளுக்கு கையை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டது. திருமானூர், கல்லகம், அல்லிநகரம் என மாவட்ட எல்லைவரை புறநகர் பஸ்கள் சென்றன. செந்துறை, முத்துவாஞ்சேரி, அயன் ஆத்தூர், திருமழபாடி, சுன்டக்குடி ஆகிய ஊர்களுக்கு நகர பஸ்கள் சென்றன. 10 சதவீத பயணிகள் மட்டுமே வெளியூர் சென்று வந்தனர். இதனால் பயணிகள் கூட்டமின்றி பஸ் நிலையம் காணப்பட்டது.

மினி பஸ்களை தவிர மற்ற தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன் மேற்பார்வையில் பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நகரில் ஓடும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பஸ்களில் 50 சதவீத பஸ்கள் நேற்று காலை 6.30 மணி முதல் இயக்கப்பட்டன. அரியலூர் பஸ் நிலையத்தில் கோட்டாட்சியர் கண்மணி, தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் டிரைவர் மற்றும் கண்டக்டர் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி, முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசங்களை வழங்கினர்.

ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் பஸ் நிலையத்தில் பெரும்பாலும் பயணிகள் இல்லாமல் பஸ் நிலையம் கூட்டமின்றி காணப்பட்டது. பஸ்களிலும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். ஒரு பஸ் புறப்பட்டு சென்ற பின்னர், சுமார் 30 முதல் 50 நிமிடங்களுக்கு பின்னரே அடுத்த பஸ் புறப்பட்டு சென்றது. ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும்பாலான பயணிகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று வரவே பஸ்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால், பஸ்களில் மிக குறைந்த பயணிகளே பயணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 22 புறநகர் மற்றும் 7 நகர பஸ் உள்ளிட்ட 29 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. முன்னதாக நேற்று காலை போக்குவரத்து பணிமனையில் அனைத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. போக்குவரத்து பணிமனை மண்டல அதிகாரி சண்முகசுந்தரம், டிரைவர்களுக்கு முக கவசம், கையுறை வழங்கினார்.


Next Story