மானாமதுரையில் பரபரப்பு: திருமணமான மறுநாளில் மணப்பெண் திடீர் தற்கொலை


மானாமதுரையில் பரபரப்பு: திருமணமான மறுநாளில் மணப்பெண் திடீர் தற்கொலை
x
தினத்தந்தி 2 Sept 2020 4:15 AM IST (Updated: 2 Sept 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் திருமணம் முடிந்த மறுநாளில் மணப்பெண் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்தவர், செல்வக்குமார்(வயது 27). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் சுவேதா(20).

செல்வக்குமாருக்கும், சுவேதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் மானாமதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நிலையில் புதிதாக கட்டிய வீட்டில் புதுமண தம்பதிகள் குடியேறினர். இந்தநிலையில் புதுப்பெண் அவரது கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் உள்ள தனது செல்போனை எடுத்து வரும்படி கூறினார். இதையடுத்து போனை எடுத்து வருவதற்காக செல்வக்குமார் சென்றார். அப்போது மணப்பெண் சுவேதா புதுவீட்டின் கதவை அடைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் கதவை திறக்கும்படி சத்தம்போட்டுள்ளார்.

ஆனால் சுவேதா கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வக்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே சுவேதா இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்ன காரணத்திற்காக சுவேதா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2-வது நாளில் மணப்பெண் தற்கொலை செய்ததால் சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் மேல்விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story