தேனியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கிய வழக்கில் போலீஸ் ஏட்டு கைது
தேனியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பதுக்கிய வழக்கில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி,
தேனி வெங்கலாகோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் அங்கிருந்து 3 பேர், புகையிலைப் பொருட்களை காரில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்ற போது அல்லிநகரம் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அங்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான 1½ டன் புகையிலைப் பொருட்கள் இருந்தன. அந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் அவற்றை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை அல்லிநகரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வீட்டின் உரிமையாளர் கணேசன் (வயது 48), எடமால் தெருவை சேர்ந்த மணிகண்டன் (35), காமாட்சிபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜகுரு (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த புகையிலைப் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பவத்தில், தேனியை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனால், கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தேனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள போலீஸ் துப்பறியும் மோப்பநாய் பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு பிரசன்னா (35) என்பவர் இந்த புகையிலைப் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், பிரசன்னாவை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர். அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரியகுளம் மாவட்ட கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் பிரசன்னாவின் நண்பரான, தேனி கடற்கரை நாடார் தெருவை சேர்ந்த நவரத்தினவேல் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கைதான ராஜகுரு அளித்த தகவலின் பேரில் போலீஸ் ஏட்டு பிரசன்னா கைது செய்யப்பட்டுள்ளார். அவரும், இந்த வழக்கில் தேடப்படும் நவரத்தினவேல் என்பவரும் நீண்டகால நண்பர்கள். நவரத்தினவேல் மீது இதுபோன்ற புகையிலைப் பொருட்கள் பதுக்கியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைதான ஏட்டு மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார்.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கல் வழக்கில் போலீஸ் ஏட்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story