ஆனந்த சதுர்த்தி தினத்தில் 28 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு


ஆனந்த சதுர்த்தி தினத்தில் 28 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 3 Sept 2020 4:37 AM IST (Updated: 3 Sept 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

ஆனந்த சதுர்த்தி தினத்தையொட்டி 28 ஆயிரம் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

மும்பை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் 11-வது நாளான ஆனந்த சதுர்த்தி தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மும்பையில் இந்த விழா களையிழந்து காணப்பட்டது. இருப்பினும் கடற்கரைகள், செயற்கை குளங்களில் அன்றைய தினத்தில் மட்டும் 28 ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.

நேற்று அதிகாலை 3 மணி நிலவரப்படி மொத்தம் 28 ஆயிரத்து 293 சிலைகள் கரைக்கப்பட்டதாகவும், இதில் மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த 3 ஆயிரத்து 817 சிலைகளும், வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 24 ஆயிரத்து 476 விநாயகர் சிலைகளும் அடங்கும்.

செயற்கை குளங்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாநகராட்சி சார்பில் செயற்கை குளங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குளத்தில் 13 ஆயிரத்து 742 சிலைகள் கரைக்கப்பட்டன. சிலை கரைப்பு சமூகமாக நடைபெறும் வகையில் 23 ஆயிரம் பேரை மும்பை மாநகராட்சி பணியில் அமர்த்தி இருந்தது.

லால்பாக் ராஜா

விநாயகர் சதூர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் லால்பாக் ராஜா கணபதி மண்டலில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது. மேலும் விழா நாட்களில் அங்கு அறக்கட்டளை சார்பில் சமூக நலப்பணி, பிளாஸ்மா தானம், ரத்த தான முகாம் நடைபெற்று வந்தது. இதுபோல வடாலா ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story