அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் உழைக்க வேண்டும் - அமைச்சர் காமராஜ் பேச்சு
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அ.தி.மு.க.வின் நன்னிலம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி மண்டல பொறுப்பாளர் வினுபாலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க. மக்கள் இயக்கமாக விளங்கி வருவதால் தொடர்ந்து அடுத்த முறையும் ஆட்சி கட்டிலில் அமரும். இதற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உழைக்க வேண்டும்
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை, புதிய திட்டங்களை தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். சாதனைகளை எடுத்து சொல்லி மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நேர்மையுடனும், உண்மையுடனும் மக்களுக்கு பணியாற்ற உறுதி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் கே.கோபால், எஸ்.ஆசைமணி, ஒன்றியக்குழு தலைவர்கள் நன்னிலம் விஜயலட்சுமி குணசேகரன், குடவாசல் கிளாராசெந்தில், ஒன்றிய செயலாளர்கள் நன்னிலம் ராம குணசேகரன், சி.பி.ஜி. அன்பழகன், குடவாசல் பாப்பாசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், முதல்- அமைச்சரின் சிறந்த நடவடிக்கையால் குறைந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தான் இறப்பு என்னிக்கை குறைவாக உள்ளது. வருகிற சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள்.
ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேலைநிறுத்தத்தில் அனைத்து சங்கங்களும் ஈடுபடவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் வேலைக்கு உடனே திரும்ப வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் தேவையான நேரத்தில் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு எடுப்பார். நீட் தேர்வு குறித்து அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story