இந்தி திரையுலக கலைஞர்கள் ‘திறமையால் வெற்றி பெற்றுள்ளனர், மதத்தால் அல்ல’ சிவசேனா கருத்து


இந்தி திரையுலக கலைஞர்கள் ‘திறமையால் வெற்றி பெற்றுள்ளனர், மதத்தால் அல்ல’ சிவசேனா கருத்து
x
தினத்தந்தி 12 Sep 2020 9:32 PM GMT (Updated: 12 Sep 2020 9:32 PM GMT)

இந்தி திரையுலக கலைஞர்கள் திறமையால் வெற்றி பெற்று உள்ளனர், மதத்தால் அல்ல என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் கடந்த சில நாட்களுக்கு முன், “ இஸ்லாமியர்கள் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் வாழ்க்கையும், தொழிலையும் பணயம் வைத்து உள்ளதாகவும், ராணி லெட்சுமிபாய், சத்ரபதி சிவாஜி மகாராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பதாகவும் ” கூறியிருந்தார்.

இந்தநிலையில் இந்தி திரையுலகமான பாலிவுட்டில் கலைஞர்கள் திறமையால் வெற்றி பெறுகின்றனர், மதத்தால் அல்ல என சிவசேனா கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கான்களின் ஆதிக்கம்

இந்திய திரையுலகை நிறுவிய தாதாசாகிப் பால்கே மராத்தியர். இங்கு கலைஞர்கள் திறமையால் வெற்றி பெற்று உள்ளனர். மதத்தினால் அல்ல.

திரையுலகில் வாய்ப்பு தேடி மும்பை வருபவர்கள் முதலில் நடைபாதையில் தான் வசிக்கின்றனர். பின்னர் ஜூகு அல்லது மலபார்ஹில் பகுதியில் பங்களா வீடு கட்டி செல்கின்றனர். தங்கள் கனவுகளை அடைய செய்த இந்த நகரத்திற்கு அவர்கள் எப்போதும் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் மும்பைக்கு துரோகம் செய்ததில்லை. நகரின் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றனர். பல கலைஞர்கள் பாரத் ரத்னா விருது பெற்று உள்ளனர். நிசான்-இ-பாகிஸ்தான் விருது கூட பெற்று உள்ளனர்.

இந்தி திரையுலகில் தற்போது கான்களின் ஆதிக்கம் இருப்பதாக கூறுகின்றனர். ஒருகாலத்தில் திரையுலகில் பஞ்சாபிகள், மராத்தியர்கள் ஆதிக்கம் இருந்தது. திலிப் குமார் (நிஜ பெயர் யுசுப்கான்), மதுபாலா (மும்தாஜ் ஜெகன் பேகம் தேகல்வி) உள்ளிட்ட பல இஸ்லாமிய நடிகர்கள் இந்து பெயர்களுக்கு மாறி உள்ளனர். கபூர், ரோசன், தத், சாந்தாராம் குடும்பத்தில் சிறந்த நடிகர்கள் உள்ளனர். ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா போன்றவர்கள் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தவர்கள். அவர்களின் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் தொடர்ந்து சினிமாவில் நடித்தால் என்ன பிரச்சினை? இவர்கள் குளத்தில் இருந்து கொண்டு வந்த மீனுக்கு சண்டை போடுவதில்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்கள் மீது கல் எறிய வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story