கடற்படை அதிகாரியை தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிவசேனாவினர் 6 பேர் மீண்டும் கைது - ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு


கடற்படை அதிகாரியை தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிவசேனாவினர் 6 பேர் மீண்டும் கைது - ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 15 Sep 2020 11:30 PM GMT (Updated: 15 Sep 2020 10:52 PM GMT)

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியை தாக்கியதில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து சிவசேனாவினர் 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பை காந்திவிலியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா(வயது62). இவர் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரேயின் கேலி சித்திரத்தை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்தார்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டுக்குள் நுழைந்த சிவசேனாவினர் சிலர் மதன் சர்மாவை அடித்து உதைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் அவரை தாக்கிய சிவசேனாவினர் 6 பேரை போலீசார் கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஜாமீனில் விடுவிக்க முடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் போராட்டம் செய்தனர். மேலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாதிக்கப்பட்ட மதன் சர்மாவை போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளை தாக்கிய சிவசேனாவினர் 6 பேரை நேற்று அதிகாலை சம்தா நகர் போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அவரை பா.ஜனதா மூத்த தலைவர்களான மங்கள் பிரதாப் லோதா, அதுல் பட்கால்கர் ஆகியோர் அழைத்து சென்றிருந்தனர்.

அப்போது தான் தாக்கப்பட்டது குறித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிடும்படியும் கவர்னருக்கு மதன்சர்மா கோரிக்கை வைத்தார்.

சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த மதன்சர்மா நிருபர்களிடம் கூறுகையில், “என்னை தாக்கியவர்கள், நீ பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவன் தானே என்று கேட்டப்படி அடித்தனர். எனவே நான் இன்று முதல் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவன் தான். சிவசேனாவினர் தாக்கியதில் எனக்கு கண்ணிலும், முதுகிலும் காயம் ஏற்பட்டு உள்ளது. அரசு எனக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை இல்லாததால், நான் கவர்னரை சந்தித்து உள்ளேன்” என்றார்.

Next Story