‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை - போலீசாருடன் மாணவர் சங்கத்தினர் தள்ளுமுள்ளு


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை - போலீசாருடன் மாணவர் சங்கத்தினர் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 16 Sep 2020 4:00 PM GMT (Updated: 16 Sep 2020 3:55 PM GMT)

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். அவர்கள், போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

கோவை,

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவிலான தகுதி தேர்வை (‘நீட்’) ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்தனர். எனவே அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அசாருதீன் தலைமையில் மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா மற்றும் பலர் கோவை கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

மாணவர்களின் உயிர்களை பலி வாங்கும் நீட் தேர்வை தடை செய் என்று கோஷமிட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் திடீரென்று தடுப்புகள் மீது ஏறி கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி னார்கள். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார், இந்திய மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

Next Story