கோடம்பாக்கத்தில் வாலிபர் குத்தி கொலை போதையில் நண்பர்கள் வெறிச்செயல்


கோடம்பாக்கத்தில் வாலிபர் குத்தி கொலை போதையில் நண்பர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 Sept 2020 5:48 AM IST (Updated: 18 Sept 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோடம்பாக்கத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். போதை மயக்கத்தில் அவரது நண்பர்களே அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சென்னை,

சென்னை சூளைமேடு பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்தவர் உதயக்கனி (வயது 58). இவரது மகன் பெயர் அந்தோணி (32). இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்கள் அய்யப்பன் உள்ளிட்ட சிலருடன் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில், கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், மாநகராட்சி மைதானத்தில் அமர்ந்து மது அருந்தினார். நள்ளிரவு வரை இவர்கள் வயிறு முட்ட மது குடித்து மகிழ்ந்தனர்.

நெருக்கமான நண்பர்களாக இருந்த அந்தோணியும், அய்யப்பனும் இடையில் சிறிது காலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தனர். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்த மகிழ்ச்சியை கொண்டாடவே மது அருந்தினார்களாம். அப்போது போதை அதிகமானதும், அவர்களுக்குள் மீண்டும் திடீரென்று மோதல் ஏற்பட்டது.

இந்த சண்டையில் அந்தோணி மட்டும் தனி ஆளாக நின்றார். அய்யப்பனுடன் ஏனைய நண்பர்கள் சேர்ந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்தோணியை தாக்கியதாக தெரிகிறது. அந்தோணி கத்தியால் குத்தப்பட்டார். அவரது மார்பு, வயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனால் அவர், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

அந்தோணி இறந்ததை அறிந்த அய்யப்பன் உள்ளிட்ட கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர். இது பற்றி கோடம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தியாகராயநகர் உதவி கமிஷனர் கலியன் தலைமையில் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கொலை செய்யப்பட்ட அந்தோணியின் உடலை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அய்யப்பன் உள்ளிட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story