ஆன்லைன் வசதி இல்லாத அரசு பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்


ஆன்லைன் வசதி இல்லாத அரசு பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 19 Sept 2020 1:00 PM IST (Updated: 19 Sept 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் ஆன்லைன் வசதியில்லாமல் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்கள் வீடு தேடி சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி, 

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதையடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வித வசதி ஏதும் இல்லாததால் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தற்போது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

இந்தநிலையில் காரைக்குடி கார்த்திகேயன் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் கவிஞர் தென்றல் ஆன்லைன் வசதியின்றி கல்வி கற்க முடியாமல் சிரமப்படும் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் வீடு தேடி செல்கிறார். பின்னர் அந்த பகுதியில் உள்ள மற்ற மாணவர்களையும் ஒருங்கிணைத்து அங்குள்ள கோவில் வளாகம், கடை வளாகம் உள்ளிட்டவைகளில் வைத்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறார். இதையறிந்த மேலும் சில ஆசிரியர்கள் அரசு பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்தி வருகின்றனர். இந்த முயற்சி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த ஆசிரியர்கள் கூறியதாவது, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வசதி ஏதும் இருக்காது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களை வீடு தேடி சென்று அந்த பகுதியில் உள்ள மாணவர்களை ஓரிடத்தில் போதிய சமூக இடைவெளியுடன் வைத்து பாடம் நடத்தி வருகிறோம். அவர்களும் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பை கொடுத்து வருகின்றனர் என்றனர்.

Next Story