ஏமூர் மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் தடுப்புச்சுவர் அகற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


ஏமூர் மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் தடுப்புச்சுவர் அகற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 Sep 2020 1:35 AM GMT (Updated: 20 Sep 2020 1:35 AM GMT)

ஏமூர் மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

வெள்ளியணை,

கரூரில் இருந்து திருச்சிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் மாநில சாலைகள், ரெயில்வே பாதைகள் குறிப்பிடும் இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் தான்தோன்றிமலையை அடுத்த ஏமூர் பகுதியில், கரூர் திண்டுக்கல் அகல ரெயில் பாதை குறுக்கிடும் இடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு தனியாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் சாலையோர தடுப்பு சுவரின் உயரத்தை விட சிறிது அளவு குறைவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அருகில் வரும்வரை அவர்களுக்கு தடுப்புச்சுவர் இருப்பது தெரிவதில்லை.

கோரிக்கை

இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மேம்பாலப் பகுதிக்கு அருகில் வந்து, இந்த தடுப்புச்சுவரை கவனித்து, தனி வழியில் செல்வதா, இல்லை சாலையில் செல்வதா என்று தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுபோல் இந்த பகுதியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளில் பலர் பலத்த காயம் அடைந்தும், சிலர் உயிர்களை இழந்தும் இருக்கிறார்கள்.

எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு விபத்தை ஏற்படுத்தும் இந்த தடுப்பு சுவரை அகற்ற வேண்டும், இல்லையேல் சுவர் இருப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கை அமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து நிறைவேறுமா? என எதிர்பார்க்கின்றனர்.

Next Story