கொரோனா காலத்திலும் தமிழகத்தில் 41 நிறுவனங்கள் மூலம் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்


கொரோனா காலத்திலும் தமிழகத்தில் 41 நிறுவனங்கள் மூலம் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2020 3:15 PM GMT (Updated: 20 Sep 2020 3:07 PM GMT)

கொரோனா காலத்திலும் தமிழகத்தில் 41 நிறுவனங்கள் மூலமாக 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய பாசறை செயலாளர் வினோதன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறினார். கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், மாநில மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, முன்னாள் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, கமலக்கண்ணன், பாஷியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இதற்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வராது. அதற்கான சாத்திய கூறுகள் இல்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாகவே இருக்கும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த ஆட்சி தான் நீடிக்கும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். இதற்காக பூத்துக்கு 25 பேரை தேர்வு செய்ய வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை நேரிடையாக சந்திக்கவில்லை. காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்தி வருகிறார். ஆனால் இந்த நேரத்திலும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மாவட்டம் தோறும் சென்று மக்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கொரோனா காலத்திலும் 41 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.30 ஆயிரத்து 654 கோடிக்கு முதலீடு செய்துள்ளது. இதனால் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கடலூரில் காலணி தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்வோம். 29 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். ஆகவே இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்.

உங்களால் தான் கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்று இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மீனவரணி செயலாளர் தங்கமணி, விவசாய அணி காசிநாதன், நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பெருமாள் ராஜா, ஏ.கே.சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜே.கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், ஆர்.வி. மணி, ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், மகேஸ்வரி விஜயராயலு, ஒன்றிய பாசறை செயலாளர் ராகுல், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, நகர அவை தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி ராமலிங்கம் மற்றும் கட்சி, பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பாசறை செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

Next Story