பன்வெல் அருகே விதவைப்பெண்ணை கொன்று உடலை அணையில் வீசியவர் கைது கூட்டாளிகளும் சிக்கினர்


பன்வெல் அருகே விதவைப்பெண்ணை கொன்று உடலை அணையில் வீசியவர் கைது கூட்டாளிகளும் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Sept 2020 4:58 AM IST (Updated: 21 Sept 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

பன்வெல் அருகே விதவைப்பெண்ணை கொன்று உடலை அணையில் வீசியவர் தனது கூட்டாளிகள் 3 பேருடன் கைது செய்யப்பட்டார்.

புனே,

நவிமும்பை பன்வெல் அருகே அக்ருலி கிராமத்தை சேர்ந்த 27 வயது விதவை பெண் ஒருவருக்கும், அங்குள்ள கோப்ரோலி கிராமத்தை சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இந்த பெண்ணும், அவரது 7 வயது மகளும் கடந்த சில நாட்களாக மாயமானது தொடர்பாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் கள்ளக்காதலனும் தலைமறைவானது தெரியவந்தது.

இதனால் போலீசார் சந்தேகமடைந்து அவரை தேடிவந்தனர். இதில் அவர் சத்தாரா மாவட்டம் கோரேகாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவருடன் இருந்த விதவைப்பெண்ணின் 7 வயது மகளையும் மீட்டனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலையான விதவை பெண் வாலிபருக்கு கடன் கொடுத்திருந்ததும், அதை திரும்பக்கேட்டு தொந்தரவு செய்ததால் அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார். பின்னர் உடலை எடுத்து சென்று நவிமும்பை பகுதியில் உள்ள மோர்பே அணையில் வீசியதாவும் கூறினார்.

இதையடுத்து அணையில் கிடந்த பெண்ணின் உடலை அழுகிய நிலையில் மீட்டனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story