குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனுகொடுக்க வரும் முதியவர்களுக்கு இலவச உணவு


குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனுகொடுக்க வரும் முதியவர்களுக்கு இலவச உணவு
x
தினத்தந்தி 22 Sep 2020 5:59 AM GMT (Updated: 22 Sep 2020 5:59 AM GMT)

திருவண்ணாமலையில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனுகொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லாமல் இருக்க நுழைவு வாயில் அருகில் மனுக்கள் செலுத்த ‘பெட்டி’ வைக்கப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மூலம் தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை தோறும் தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டரை நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தருகின்றனர்.

மனு அளிக்க வந்த பொதுமக்கள்

இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்திருந்தனர். அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் கந்தசாமி, அங்கு வரிசையில் நின்றிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருவண்ணாமலையில் உள்ள செவித்திறன் குறைவுடையோர் ஆரம்ப சிறார் பயிற்சி மையத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பயிற்சி பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகில் இறைவனின் சமையலறை என்ற ரூ.12 லட்சம் மதிப்பில் உணவு கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உணவு கூடம் திறப்பு விழா

இதற்கான உணவு கூட திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அதனை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் கலெக்டரே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ‘கேசரி’ தயார் செய்தார். பின்னர் இலவச உணவை வழங்கி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர். அவர்களுக்காக இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாரந்தோறும் இலவச உணவு வழங்கப்படும்’ என்றார்.

அப்போது தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மந்தாகினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story