சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம், கிறிஸ்தவம், ஜெயின், சீக்கியம், பார்சி, புத்தம் ஆகிய மதங்களில் பல்வேறு கைவினை கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் தொழிலுக்கு தேவையான மூலதன பொருட்களை வாங்கி தொழிலில் முன்னேற்றம் அடையவும், புதிதாக கைவினை தொழில் தொடங்கவும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறத்தில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதத்தில்ஆண் பயனாளிக்கு 5 சதவீதமும், பெண் பயனாளிக்கு 4 சதவீதமும் கடனுதவி வழங்கப்படும். கடன் தொகையை திருப்பி செலுத்த 5 ஆண்டு கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வேலூரில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story