திருச்சியில் துணிகரம்: நகைக்கடை அதிபரை தாக்கி 8 பவுன் நகைகள் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சியில் நகைக்கடை அதிபரை தாக்கி 8 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை பகுதி கலிமுல்லா ஷா மக்கான் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). எடத்தெரு சாலையில் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். ரவிச்சந்திரன் தனது கடையில் விற்பனை செய்வதற்கு தேவையான நகைகளை பெரிய கடை வீதியில் உள்ள நகை பட்டறைகளில் ஆர்டர் கொடுத்து செய்து, வாங்கி வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் 4 பவுன் தங்க சங்கிலி-1, தலா 2 பவுன் டாலர் சங்கிலி-2 என்று 8 பவுன் நகைகளை வாங்கிக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார். வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து இருந்த நகையை அவர் எடுக்க முயன்றார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் திடீரென அங்கு வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சூழ்ந்தது. அதில் 2 பேர் ரவிச்சந்திரனை பிடித்து கீழே தள்ளி, அந்த நகைப்பையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம கும்பல் தப்பி ஓடியபோது ஒரு செல்போன் அவர்களிடம் இருந்து தவறி கீழே விழுந்தது தெரியவந்தது. மேலும், அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகி இருந்தது.
மேலும் மர்மகும்பல் அதே பகுதியை சேர்ந்தவர்கள் தான் என்பதும், ரவிச்சந்திரனின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து நகையை கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும், கைப்பற்றப்பட்ட செல்போனில் உள்ள எண்களை வைத்தும் மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story