வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்து போராட்டம் - மயிலாடுதுறை அருகே பரபரப்பு


வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்து போராட்டம் - மயிலாடுதுறை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 12:30 PM GMT (Updated: 23 Sep 2020 12:20 PM GMT)

மயிலாடுதுறை அருகே வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொறையாறு, 

விவசாய விளை பொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா உள்ளிட்ட வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் கடை வீதியில் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு விவசாய சங்க நாகை மாவட்ட தலைவர் துரைராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களின் நகல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. போராட்டத்தின்போது அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் உருவ பொம்மைக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்த செம்பனார்கோவில் போலீசார், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story