சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 5 கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை - பரமக்குடி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் 5 கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் போஸ்(வயது 49). இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்திசேரி விலக்கு ரோடு பகுதியில் சென்ற அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றது.
இந்தநிலையில் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட அபிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீழ்குடியை சேர்ந்த சுப்பிரமணியன்(55) என்பவர் அந்த கும்பலை பார்த்து சந்தேகத்தின்பேரில் விசாரித்தார். உடனே அந்த கொள்ளை கும்பல் அவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த மோதிரம், கைக்கெடிகாரம், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது. இந்தநிலையில் சுப்பிரமணியனை மதுரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இந்த வழக்கானது பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரில் முத்துராமலிங்கம்(38) என்பவர் விடுதலை செய்யப்பட்டார். துரைப்பாண்டி(40), முனியசாமி (38) ஆகிய இருவரும் இறந்து விட்டனர். ஆகையால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.
மீதமுள்ள மதுரை கீரைத்துரையை சேர்ந்த முருகேசன் (38), வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஞானவேல்பாண்டியன்(39) கீரைத்துரையை சேர்ந்த ரவி சண்முகம்(36), திருமூர்த்தி(39), தவசி மகன் முத்துராமலிங்கம் (42) ஆகிய 5 பேருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி மலர்வண்ணன் தீர்ப்பளித்தார்.
போலீஸ் ஏட்டு போஸ் தாக்கப்பட்ட வழக்கில் இவர்கள் 5 பேருக்கும் 7 வருடம் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வெங்கடேசன் வாதாடினார்.
Related Tags :
Next Story