கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிறுத்தம் - விவசாயிகள் அவதி
கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் பழையபாளையம், புத்தூர், பனங்காட்டான்குடி, குன்னம், வேலூர் மகாராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல் மூட்டைகள் தினந்தோறும் கொள்முதல் செய்யப்படுகின்றன. விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல் கடந்த ஒரு மாத காலமாக கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து 60 சதவீத நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து அடுக்கி வைத்து அதனை காவல் காத்து வருகின்றனர். கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story