வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து சேலம் உள்பட 9 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்
மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து சேலம் உள்பட 9 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சேலம்,
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்தும், அதனை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் சேலம் உள்பட 9 இடங்களில் வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையொட்டி சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. டெல்லி பாபு மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், விவசாயிகளை பாதிக்கக்கூடிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து விவசாயிகளும், கம்யூனிஸ்டு கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர், தாரமங்கலம், மேச்சேரி, ஏத்தாப்பூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், கொங்கணாபுரம் ஆகிய 8 இடங்களிலும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர் பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட உதவி தலைவர் அரியாகவுண்டர் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொருளாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் விவசாய சங்க வட்ட செயலாளர் அர்த்தனாரி, விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் சின்ராஜ், தாலுகா விவசாய சங்க தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூரில் சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு துணைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆத்தூர் பழைய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேச்சேரி பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து தலைமையில் விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்திய 2 பெண்கள் உள்பட 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story