காணாமல் போன மீனவர்கள் மீட்பு: மியான்மர் நாட்டில் இருந்து அழைத்து வரப்படுகிறார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்


காணாமல் போன மீனவர்கள் மீட்பு: மியான்மர் நாட்டில் இருந்து அழைத்து வரப்படுகிறார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2020 3:45 AM IST (Updated: 27 Sept 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் முயற்சியால் காணாமல் போன மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மியான்மர் நாட்டில் இருந்து அவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

கடந்த ஜூலை 23-ந் தேதி சென்னை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்று ஆகஸ்டு 7- ந்தேதி கரை திரும்ப வேண்டிய செவுள்வலை ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு கரை திரும்பவில்லை. மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கப்பல் படை மற்றும் சென்னை மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளை கொண்டு காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

மேலும் தமிழக அரசு, இந்திய வெளியுறவுத்துறை வழியாக மியான்மர், வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடல் பகுதிகளிலும் தேடுவதற்கு வேண்டுகோள் விடுத்தது. தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியின் பலனாக கடந்த 14-ந் தேதி அதிகாலை காணாமல் போன 9 மீனவர்களும் மியான்மர் கடற்பகுதியில், மியான்மர் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டு, போதுமான உணவு மற்றும் இதர வசதிகள் அங்குள்ள இந்திய தூதரகம் வழியாக செய்து தரப்பட்டது.

மத்திய அரசு மற்றும் தமிழக அரசு, இந்திய தூதரகம் வழியாக மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக மீனவர்கள் வரும் 28-ந் தேதி (நாளை) மியான்மர் நாட்டில் இருந்து விமானத்தின் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, 29-ந் தேதி தமிழகம் வருவதற்கு உரிய நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மீட்கப்பட்ட பிறகு, தனிப்பட்ட நிகழ்வில் காணாமல் போன எஞ்சிய மீனவர் பாபுவை தேடும் பணி மியான்மர் நாட்டு கடற்படையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story