மசினகுடியில் மீன் வளர்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


மசினகுடியில் மீன் வளர்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 Sept 2020 11:03 AM IST (Updated: 28 Sept 2020 11:03 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடியில் மீன் வளர்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள மசினகுடியில் சுற்றுலா சார்ந்த திட்டங்களும் சரிவர கிடையாது. இங்கு மரவகண்டி உள்பட சில ஏரிகள் உள்ளது. சீசன் காலங்களில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு குழாம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேபோன்று மசினகுடி ஊராட்சி அலுவலகம் பின்புறம் மீன்வளத் துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இங்கு துறை ரீதியாக மீன்கள் வளர்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் உள்ளதால் குளம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும். மேலும் மீன் வளர்ப்பு சார்ந்த திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெயரளவில் மட்டுமே குளத்தில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. மசினகுடி பகுதியில் உள்ள குளங்களை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக பராமரித்து மீன்களை அதிக அளவு வளர்த்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என பொதுமக்கள் யோசனை தெரிவித்து உள்ளனர்.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்ட மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வெளிமாநிலங்களில் இருந்து கடல் மீன்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் பல நாட்களாக பதப்படுத்தப்பட்ட மீன்களையே பயன்படுத்தும் நிலை உள்ளது.

இதனால் மசினகுடி பகுதியில் உள்ள குளங்களை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக பராமரித்து மீன்களை அதிக அளவு வளர்த்து திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தொடர்ந்து மீன்களை சந்தைப்படுத்தினால் அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும் நீலகிரி மக்களுக்கும் மீன்கள் தடையின்றி கிடைக்கும். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story