குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 28 Sep 2020 10:45 PM GMT (Updated: 28 Sep 2020 5:43 PM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். இதனால் நேற்று தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மைசூரு தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் நடைபெறும் முக்கியமான திருவிழாவாகும். இந்த தசரா திருவிழாவுக்கு காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். விரதம் இருந்து காளி வேடம் அணியும் பக்தர்கள் 10-ம் திருவிழா அன்று நடைபெறும் சூரசம்ஹார விழாவுக்கும் மற்றும் கோவிலுக்குள் தரிசனத்துக்கும் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். உள்ளூர் பத்திரகாளியம்மன் கோவில் சப்பரம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து எதிர் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயம் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், வாதிரியார் சமுதாயத்தை வேறு சமுதாயத்துடன் இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிடக் கூடாது. இதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில தலைவர்கள் எங்கள் அனுமதி இன்றி எங்களை அவமதிக்கும் விதத்தில் தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் நெப்போலியன் தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில், ஆறுமுகநேரி டாஸ்மாக் கடையில் ரூ.1 கோடியே 75 லட்சம் வரை இருப்பு தொகை குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி 30-வது வட்ட அ.ம.மு.க செயலாளர் காசிலிங்கம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி வி.வி.டி. ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும். டூவிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் பல குழந்தைகளுக்கு உரிய போன் வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியவில்லை. ஆகையால் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் தங்கள் வயலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பழையபடி பாதையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி சிவ பாரத இந்து மக்கள் இயக்க தலைவர் பாலசுப்பிரமணியன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மக்கள் கலந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழாவுக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் கோவில் முன்பு சிவ பாரத இந்து மக்கள் இயக்கம் சார்பில் வருகிற 4-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

குலசேகரன்பட்டினம் காளி பக்தர்கள் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடைபெற அனுமதி அளிக்க வேண்டும். ஒவ்வொரு தசரா குழுவுக்கும் ஒரு காளி வேடம் அணிபவரும், குழு தலைவர் மற்றும் ஒரு நபர் மட்டும் கோவிலுக்கு வந்து மொத்தமாக காப்புகளை வாங்கிச் சென்று காப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். திருவிழா நாட்களில் 2-ல் இருந்து 9 நாட்களுக்குள் விரதமிருந்த பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் எங்களுக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும். நாங்கள் 40 ஆண்டுகளாக அனைத்து மாவட்ட காளி பக்தர்களும் கலந்து கொண்டு 14 வகையான திருத்தங்களோடு 54 வகையான அபிஷேகம் செய்து அமைதியான முறையில் காளி பூஜை நடத்தி வருகிறோம். அதற்கும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளோடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்.

Next Story