கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு: சமயபுரத்தில் ஒரு வாரம் கடைகள் அடைப்பு


கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு: சமயபுரத்தில் ஒரு வாரம் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 28 Sep 2020 10:00 PM GMT (Updated: 29 Sep 2020 3:14 AM GMT)

கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக சமயபுரம் அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று முதல் ஒரு வாரத்துக்கு கடைகள் அடைக்கப்படுகின்றன.

சமயபுரம், 

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரிய வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், நிம்மதி அடைந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இதேபோல, பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலும் திறக்கப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மதிக்காமல் நடந்து கொள்வதால் சமயபுரத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ துறையினர் அச்சம் அடைந்ததோடு, சமயபுரம் பகுதியை கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதனைத்தொடர்ந்து சமயபுரம் பகுதியை நோய்த்தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், மண்ணச்சநல்லூர் தாசில்தார் முருகேசன் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, மண்ணச்சநல்லூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் மற்றும் சமயபுரம் போலீசார், வியாபார சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் 28-ந் தேதி முதல்(நேற்று) ஒரு வாரத்திற்கு கடைகளை திறக்கக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை சமயபுரம் கடைவீதி, நால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக் கடைகள், பெட்டிக் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால், பஸ்கள் வழக்கம்போல இயங்கின. இதனால், வெளியூரில் இருந்து அம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் கோவில் முன்பு உள்ள ஒருசில கடைகளில் சூடம், நெய் விளக்கு வாங்கி கோவில் முன்புறம் ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர்.

Next Story