வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் மசோதாக்களை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி ஊட்டி நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களால் விவசாயத்தில் ஆன்லைன் வர்த்தகம் திணிக்கப்படுகிறது. நெல்லுக்கான குறைந்தபட்ச விலைக்கு உத்திரவாதம் இருக்காது. அரசு நெல் கொள்முதல் நிலையங்கள், உழவர் சந்தைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கக்கூடிய 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு நகர செயலாளர் ஜார்ஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் கொண்டு வந்த வேளாண் மசோதாக்கள் விளைபொருட்களை வரம்பின்றி பதுக்கி வைக்கும் சமூக விரோத செயலுக்கு வழிவகுக்கிறது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனை பாதுகாக்கும் அத்தியாவசிய சட்டத்தை சீர்குலைத்து தனியார் நிறுவனங்களுக்கு துணை போகிறது. விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் மசோதாக்களை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் வி.பி. தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர். அதேபோல் சோலூர், சேலாஸ், எல்லநள்ளி, கூக்கல்தொரை உள்பட மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோத்தகிரி ஒன்றிய பொறுப்பாளரும், தி.மு.க. கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான எக்ஸ்போ செந்தில் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவால் விவசாயத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாயத்தை தாரைவார்க்க வழிவகுக்கும். அரசு நெல் கொள்முதல் மையங்கள், வேளாண் துறை ஒழுங்குமுறை கூடங்கள், உழவர் சந்தைகள் ஆகியவை மூடப்படும் அபாயம் ஏற்படும். இதனால் சிறு விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாபர், செல்வம், ராஜூ உள்பட காங்கிரஸ் கட்சியினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போல கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி கிராமப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.
மஞ்சூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story