உடன்குடியில் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார்


உடன்குடியில் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 2 Oct 2020 5:37 AM IST (Updated: 2 Oct 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பிள்ளையார்பெரியவன் தட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மகன் செல்வமுருகன் (வயது 43). இவர் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அருணா (42). இவர்களுக்கு கமலேஷ் (18), அகிலேஷ் வர்ஷன் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

செல்வமுருகன் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் அவர், உடன்குடி பஜாருக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் உடன்குடி-செட்டியாபத்து ரோடு கூழையன்குண்டு காட்டுப்பகுதியில் பனை மரத்தின் அடியில் செல்வமுருகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். பிணத்தின் அருகே விஷ பாட்டிலும் கிடந்தது. அவரது மோட்டார் சைக்கிளும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி, குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில் செல்வமுருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இறந்து கிடந்த செல்வமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமுருகன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த செல்வமுருகன் கடந்த 1999-ம் ஆண்டு 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் தட்டார்மடம், தருவைகுளம், ஆறுமுகநேரி போலீஸ் நிலையங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story