தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன், பெண் தீக்குளிக்க முயற்சி - போலீஸ் பாதுகாப்பை மீறி மண்எண்ணெய் பாட்டிலுடன் நுழைந்ததால் பரபரப்பு


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன், பெண் தீக்குளிக்க முயற்சி - போலீஸ் பாதுகாப்பை மீறி மண்எண்ணெய் பாட்டிலுடன் நுழைந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Oct 2020 4:30 AM IST (Updated: 6 Oct 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றனர். அவர் போலீஸ் பாதுகாப்பையும் மீறி மண்எண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர், 

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. பொதுமக்கள் மனுக்களை அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும், வாட்ஸ்-அப் மூலமும் அனுப்பி வருகிறார்கள். மேலும் கலெக்டரை சிலர் நேரில் சந்தித்தும் மனு அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை இந்திரா நகர் 9-வது தெருவை சேர்ந்த சூசைராஜ் மனைவி ஆரோக்கிய செல்வி(வயது 45) என்பவர் தனது 2 மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் வாசலில் கலெக்டர் கார் நிறுத்தும் இடத்திற்கு முன் வந்து நின்று திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அதை பார்த்ததும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடி வந்து செல்வியிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை போலீஸ் ஜீப்பில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லும் பொதுமக்கள் மற்றும் அவர்கள் எடுத்துச்செல்லும் உடைமைகளை சோதனை செய்த பின்னர் தான் போலீசார் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஆனால் போலீஸ் பாதுகாப்பை மீறி ஆரோக்கிய செல்வி மண்எண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக ஆரோக்கிய செல்வி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், “எனது கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் எனது வீட்டிற்கு மாதாக்கோட்டையை சேர்ந்த ஜார்ஜ் டேவிட் மற்றும் சிலர் நுழைந்து வீட்டில் இருந்த கேமரா மற்று பொருட்களை அடித்து உடைத்து, எங்களை வீட்டை விட்டு வெளியே தள்ளி பூட்டினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வந்து பார்த்தனர். பின்னர் நான் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 22 பவுன் நகைகள், செல்போன், பணம் ஆகியவற்றை அவர்கள் எடுத்துச்சென்றது தெரிய வந்தது. மேலும் கண்காணிப்பு கேமரா, அதில் பதிவான காட்சிகள் ஆகியவற்றையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும், ஜார்ஜ் டேவிட்டுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வீடு புகுந்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் நாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story