நாமக்கல்லில், தொழில் அதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நாமக்கல்லில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.20 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல்-திருச்சி சாலை இந்திரா நகரில் வசித்து வருபவர் பொற்கோ (வயது 56). தொழில் அதிபர். இவர் நாமக்கல்லில் டயர் ஷோரூம் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 3-ந் தேதி சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு தந்தையின் நினைவு நாளையொட்டி சாமி கும்பிட குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு நாமக்கல் திரும்பினார். அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. கப்போர்டில் பையில் வைத்திருந்த சுமார் ரூ.20 லட்சம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொற்கோ நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பொற்கோ வெளியூர் சென்று இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டு, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story