கர்ப்பிணி சாவில் மர்மம் இருப்பதாக கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை


கர்ப்பிணி சாவில் மர்மம் இருப்பதாக கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Oct 2020 5:15 AM GMT (Updated: 6 Oct 2020 5:12 AM GMT)

கர்ப்பிணி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த மருதை மகன் மணிகண்டன். இவருக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மணி மகள் மணிமேகலை (வயது 20) என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த மணிமேகலை நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மணிகண்டன் குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசாரும், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணிமேகலை சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், இறந்த மணிமேகலையின் உடலில் காயங்கள் இருப்பதால், குடும்ப தகராறில், அவருடைய கணவர் குடும்பத்தினரே அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடுகின்றனர். எனவே மணிமேகலையின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அப்போது அவர்களிடம், அங்கிருந்த மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story