தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா - மக்கள் அலட்சியம் காட்டுகிறார்களா?


தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா - மக்கள் அலட்சியம் காட்டுகிறார்களா?
x
தினத்தந்தி 6 Oct 2020 10:30 PM GMT (Updated: 6 Oct 2020 11:11 PM GMT)

தஞ்சை மாநகராட்சி பகுதியில் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் மக்கள் அலட்சியம் காட்டுவதால் கொரோனா தொற்று அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் இந்தியாவிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதன் தொற்று அதிகரித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை 12 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மட்டும் 2 ஆயிரத்து 386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 1,993 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 339 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருப்பினும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் தினமும் 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தினமும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளில் தான் தொற்று அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குடிசை பகுதிகள், மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. வசதி படைத்தவர்கள், படித்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தான் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வார்டு 37, 38, 39, 40, 42, 51 ஆகிய வார்டுகளில் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த வார்டுகளில் மட்டும் தற்போது வரை 600-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 37, 38, 39, 51 வார்டுகளில் பாதிப்பு 100-ஐ தாண்டி உள்ளது. மேலும் நாளுக்கு நாள் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

மற்ற வார்டுகளில் பாதிப்புகள் குறைவாக உள்ளது. குடிசை பகுதிகளில் அதிகம் உள்ள 6, 7 வார்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20-க்கும் குறைவாக உள்ளது. மற்ற வார்டுகளில் 50-க்கும் குறைவாகத்தான் உள்ளது. காரணம் இந்த பகுதியில் உள்ள மக்கள் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்கிறார்கள். ஆனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் வார்டுகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தினால் பரிசோதனை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. கொரோனா குறித்த அலட்சியம் தான் கொரோனா அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள வார்டுகள், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, அருளானந்தநகர், கூட்டுறவு காலனி, முனிசிபல் காலனி, சுந்தரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு சங்க நிர்வாகிகள், முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினி தெளிப்பது போன்றவை குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். சளி, காய்ச்சல், இருமல், வாசனை இன்மை போன்றவை இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்த வேண்டும். அந்தந்த பகுதியில் நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களையும் பயன்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்தால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் போன்றவற்றையும் குடிக்க வேண்டும். குடிசை பகுதி பிற பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி திறனும் அதிகமாக உள்ளது”என்றனர்.

Next Story