உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2020 5:30 AM GMT (Updated: 7 Oct 2020 5:23 AM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவரது குடும்பத்திற்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அப்பெண்ணை கொலை செய்தவர்களை தண்டிக்கக்கோரியும், இந்திய பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் எதிரே சத்தியாகிரக அறவழிப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி மற்றும் மாவட்ட துணைத்தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, வட்டார நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் எதிரில் அமைதிப்போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் எஸ்.தனசேகரன், எஸ்.தஸ்தகீர், கே.சக்திவேல், கே.சுமதி, பாவாடை, கிருபானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் பிரிவு மாவட்ட நிர்வாகி சோலைநாராயணன் வரவேற்றார். சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா, விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலபத்மநாபன், தாயுமானவர், கே.எஸ்.ஏழுமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரமுத்து, மணலூர்பேட்டை நகர தலைவர் கமருதீன், வட்டார விவசாய அணி தலைவர் கண்ணதசான், நகர முன்னாள் தலைவர் பாலச்சந்தர், வட்டார துணைத்தலைவர்கள் நடேசன், வீரவேல், வெள்ளியங்கிரி, நகர செயலாளர்கள் முருகன், ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் அரகண்டநல்லூர் நகர தலைவர் சாதுல்லாகான் நன்றி கூறினார்.

Next Story