செவ்வாய்கிரகம் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு திருச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்


செவ்வாய்கிரகம் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு திருச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்
x
தினத்தந்தி 7 Oct 2020 4:24 PM GMT (Updated: 7 Oct 2020 4:24 PM GMT)

செவ்வாய்கிரகம் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வை திருச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

திருச்சி,

செவ்வாய்கிரகம் சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின் போது அதன் வட்டப் பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை நேற்று அடைந்தது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7.47 மணிக்கு இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெற்றது. பூமிக்கும் செவ்வாய்கிரகத்துக்கும் இடையே அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கிலோ மீட்டர் என்றும், நேற்று இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள தூரம் 6 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, வெறும் கண்களால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். அவ்வாறு பார்க்கும்போது பிரகாசமாக தெரியும் என்றும், இன்னும் 13 ஆண்டுகள் கழித்து தான் இந்த நிகழ்வு உருவாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி திருச்சியில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த அரிய வானியல் நிகழ்வு கண்டுகளித்தனர். வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தெரிவித்திருப்பதால் எந்தவித பயமும் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பார்த்தனர். ஒரு சிலர் தங்களது செல்போன்களில் படமும் பிடித்தனர். வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளின்போது, திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் இந்த அரிய வானியல் நிகழ்வினை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். தொலைநோக்கு கருவி மூலம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று இந்த காட்சிகளை பார்ப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அண்ணா கோளரங்கம் மூடப்பட்டு உள்ளது. ஆகையால் அங்கு இதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெறவில்லை. இதையடுத்து பெரும்பாலானோர் தங்களது வீட்டின் மொட்டை மாடிகளில் நின்றபடி பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Next Story