கருத்து கேட்பு கூட்டத்தில் காரசார விவாதம்: காரியாபட்டி அருகே ஜவுளி தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு
காரியாபட்டி அருகே ஜவுளி தொழில் பூங்கா அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள தாமரைக்குளம், பொட்டல்குளம் கிராமத்தில் ஜவுளி தொழில் பூங்கா (சாயப்பட்டறை) அமைக்க கடந்த 28-ந்தேதி பூமி பூஜை போட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் ஜவுளி தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தனக்குமார் தலைமையில் இரு தரப்பினர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சகாய ஜோஸ், விஜயகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், மண்டல துணை தாசில்தார் ராஜீவ் காந்தி, டி.செட்டிகுளம் ஊராட்சி தலைவர் வேங்கை மார்பன், சூரனூர் ஊராட்சி தலைவர் ராதிகா சிவகுமார், துலுக்கன்குளம் ஊராட்சி தலைவர் வாசுதேவன், கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த முருகன், அம்மாசி மற்றும் ஜவுளி தொழில் பூங்கா பங்குதாரர்கள், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
ஜவுளி தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக 2016-ம் ஆண்டு கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சாயப்பட்டறை கழிவுகள் ஆறுகளில் கலந்து விவசாய நிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி நிறுவனத்தினர் ஆரம்ப காலகட்டத்தில் கிராம மக்களிடம் இது சாதாரண ஜவுளி பூங்கா என்று கூறி ஊராட்சி மன்றங்களில் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் சாயப்பட்டறை என்று பின்னர் தெரிய வந்ததால் ஆரம்ப நிலையிலேயே நிறுவனம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இந்த பகுதியில் ஜவுளி தொழில் பூங்கா அமைந்தால் நிலத்தடி நீர் கெட்டுவிடும். இந்த பகுதியில் உள்ள காணல் ஓடை மற்றும் கண்மாய் நீர்நிலைகள் பாதிப்பு ஏற்படும் என்பதால் இத்திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
சூரனூர், துலுக்கன்குளம், டி.செட்டிக்குளம், சென்னிலைக்குடி கிராம ஊராட்சி தலைவர்கள் ஜவுளி தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு விதிகளின்படி இங்கு இடம் தேர்வு செய்யப்பட்டது சரியல்ல என்று கூறினர். ஜவுளி தொழில் பூங்கா நிறுவனம் சார்பாக பொதுமக்களிடையே விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. இதற்கான அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தாசில்தார் தனக்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story