வேலூர் மாவட்டத்தில், ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 186 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது


வேலூர் மாவட்டத்தில், ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 186 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 9 Oct 2020 5:00 AM GMT (Updated: 9 Oct 2020 4:51 AM GMT)

வேலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 890 ஆக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 186 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

வேலூர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வரும் 55 வயது போலீஸ்காரருக்கு சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி காணப்பட்டன. அவரின் சளிமாதிரி பரிசோதனையில் தொற்று உறுதியானது. அதையடுத்து அவரின் குடும்பத்தினர், உடன் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கணியம்பாடி அருகேயுள்ள அய்யம்பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதேபோன்று வேலூரில் உள்ள விடுதிகளில் தங்கி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் வடமாநிலத்தை சேர்ந்த 11 பேர், பிஷப் டேவிட் நகரை சேர்ந்த பச்சிளம் ஆண்குழந்தை, கணியம்பாடியில் 72 வயது மூதாட்டி, கஸ்பாவில் 85 வயது முதியவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 186 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது. இதுவரை 16 ஆயிரத்து 76 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 14 ஆயிரத்து 724 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story