மாவட்டத்தில் 15 ஆயிரம் சலூன் கடைகள் அடைப்பு சேலத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் 15 ஆயிரம் சலூன் கடைகள் அடைப்பு சேலத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 10:00 PM GMT (Updated: 10 Oct 2020 1:57 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 15 ஆயிரம் சலூன் கடைகளை அடைத்து சவரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

திண்டுக்கல் மாவட்டத்தில் சலூன் கடை நடத்தி வரும் ஒருவரின் 12 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வடமதுரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கைதான மாணவன் நீதிமன்றத்தால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டான். இந்த வழக்கில் போலீசார் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று சலூன் கடைகளை அடைத்து அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டன. இதையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வீர தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் மண்டல தலைவர் ரமேஷ், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் முனிரத்தினம், பெரியபுதூர் கந்தசாமி, மணக்காடு கோபி, சங்கர் உள்பட ஏராளமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது. இதேபோல், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தலைவாசலில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க தலைவாசல் கிளை சார்பில் சவரத் தொழிலாளர்கள் தங்களது கடைகளை அடைத்து, கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம், பொருளாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆட்டையாம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சவரத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் தனபால், தலைவர் சண்முகம், செயலாளர் பெரியசாமி, பொருளாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஓமலூர் போன்ற பகுதிகளிலும் சலூன் கடைகளை அடைத்து சவரத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story