செவிலியர் பணிக்கு எழுத்துத் தேர்வு 15 மையங்களில் நடந்தது


செவிலியர் பணிக்கு எழுத்துத் தேர்வு 15 மையங்களில் நடந்தது
x

புதுவையில் செவிலியர், வார்டு அட்டெண்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 செவிலியர் பணியிடங்களும், 123 வார்டு அட்டெண்டர் பணியிடங்களும் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. செவிலியர் பணிக்கு 2,897 பேரும், வார்டு அட்டெண்டர் பணிக்கு 2,730 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு நேற்று நடந்தது.

இதற்காக புதுவையில் 11 மையங்களும், காரைக்காலில் 2 மையங்களும், மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டு இருந்தன. செவிலியர் பணிக்கு நேற்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தேர்வு நடந்தது. காலை 9.15 மணி வரை தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் தேர்வு மையத்திற்குள் சென்றனர். அங்கு சமூக இடைவெளி விட்டு அமர்ந்து தேர்வு எழுதினர். இதில் 1,841 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

விடைத்தாள் வெளியானதாக பரபரப்பு

தொடர்ந்து வார்டு அட்டெண்டர் பணிக்கு மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடந்தது. இதற்காக 15 நிமிடத்திற்கு முன்பாக வந்தவர்கள் மட்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் 1,525 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைத்தாள் நேற்று மாலை https://re-c-ru-it-m-ent.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே வார்டு அட்டெண்டர் பணிக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் இரவே வெளியானதாக தேர்வு மையங்களில் தகவல் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை உறுதி செய்யவில்லை.

Next Story