பரமக்குடி அருகே, சவடு மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் - பழங்கால பொருட்கள் கிடைத்தன


பரமக்குடி அருகே, சவடு மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் - பழங்கால பொருட்கள் கிடைத்தன
x
தினத்தந்தி 15 Oct 2020 10:00 AM GMT (Updated: 15 Oct 2020 9:57 AM GMT)

சவடு மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் மண் அள்ளும்போது பழங்கால பொருட்கள் கிடைத்தன.

பரமக்குடி.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் சவடுமண் எடுப்பதற்கு மாவட்ட கனிமவளத் துறையில் அனுமதி பெற்று ஒரு தரப்பினர் ஜே.சி.பி. மூலம் லாரிகளில் மண்அள்ளிச் சென்றுள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நீர் ஆதாரம் பாதிக்கப்படும், சாலைகள் சேதமடைந்து விடும் என கூறி சவடு மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்பு இதுகுறித்து அவர்கள் பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் கிராம மக்கள் மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உடனே சதன் பிரபாகர் எம்.எல்.ஏ., போலீசாருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதைத் தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.இதையடுத்து அங்கு மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் அங்கு சவடு மண் அள்ளும்போது அங்கு பழங்காலத்து முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்கால மண் பானைகள் கிடைத்தது. அதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story