2-வது திருமணம் செய்ய திட்டமிட்டு அமெரிக்காவில் இருந்து கைக்குழந்தையுடன் விரட்டப்பட்ட பெண் - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


2-வது திருமணம் செய்ய திட்டமிட்டு அமெரிக்காவில் இருந்து கைக்குழந்தையுடன் விரட்டப்பட்ட பெண் - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Oct 2020 12:14 AM GMT (Updated: 16 Oct 2020 12:14 AM GMT)

2-வது திருமணம் செய்ய திட்டமிட்டு அமெரிக்காவில் இருந்து கைக்குழந்தையுடன் விரட்டப்பட்ட பெண் - கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்திபன் மகள் விஷ்ணுபிரியா (வயது 30). இவருக்கும், ஓடைப்பட்டியை சேர்ந்த வாசகர் மகன் விவேக் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. விவேக் பி.எச்.டி. படிப்புக்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே வசித்து வருகிறார். இவர்களின் திருமணத்தின் போது 110 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை விஷ்ணுபிரியாவின் பெற்றோர் அளித்தனர். திருமணமான ஒரு மாதத்தில் விவேக் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்று விட்டார். பின்னர் 4 மாத கர்ப்பிணியான விஷ்ணுபிரியா சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கைக்குழந்தையுடன் அவர் அமெரிக்கா சென்று கணவருடன் வசித்தார்.

இந்நிலையில் அவர் தனது கணவரின் படிப்புச் செலவுக்காக தனது பெற்றோரிடம் இருந்து பணம் பெற்றுக் கொடுத்தார். அந்த பணத்தையும் பெற்றுக் கொண்ட நிலையில், மேலும் பணத்துக்கு ஆசைப்பட்டு விவேக் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விஷ்ணுபிரியாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு 2-வது திருமணம் செய்ய திட்டமிட்டு விஷ்ணுபிரியாவை அமெரிக்காவில் இருந்து துரத்தியுள்ளனர். இதனால் அவர் கூடலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கைக்குழந்தையுடன் வந்துவிட்டார். அதன்பிறகு அவருடைய கணவர் தரப்பில் அவருக்கு எந்த ஆதரவோ, உதவியோ அளிக்கவில்லை. இதனால் அவர் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய கணவர் விவேக், மாமனார் வாசகர், மாமியார் ராஜீ, மைத்துனர் வினோத் ஆகிய 4 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story