அண்ணா பல்கலைக்கழக மண்டல மைய அலுவலகம் முற்றுகை - கோவையில், தி.மு.க. இளைஞர் அணியினர் கைது
கோவையில் அண்ணா பல்கலைக்கழக மண்டல மையத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி. கல்லூரி வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழக மண்டல மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று 6 மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக மண்டல மைய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தி.மு.க. இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி தலைமையில் நடைபெற்றது. இதற்காக ஏராளமான இளைஞர் அணியினர் அண்ணா பல்கலைக்கழக மண்டல மைய நுழைவு வாயிலை நோக்கி கோஷமிட்டவாறு முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கைகளில் தி.மு.க. கொடிகளை வைத்திருந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
அப்போது இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ்பாரி பேசியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் தாய் மொழி கன்னடம். கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் தலைநகரில் இருக்கும் ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் அவர் குறைந்தபட்ச பேச்சு வழக்கிற்காக கூட தமிழ்மொழியை அறிந்திருக்க விருப்பப்படவில்லை. தமிழ் தெரியாத ஒருவரை இத்தனை நாள் துணைவேந்தராக அனுமதித்ததே அதிகம். இப்போது சூரப்பா மாநில நிதியின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை நேரடியாக மத்திய அரசே ஏற்று நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். எனவே அவரை உடனடியாக பதவி விலக செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முற்றுகை போராட்டத்தில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, சபரி கார்த்திகேயன், அஷ்ரப் அலி, நீலகிரி சசிக்குமார், பார்த்தீபன், வக்கீல் மகுடபதி மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், மாணவர் அணி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கல்லூரிக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் சிலர் அதை தாண்டி செல்ல முயன்றபோது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம் முன்பு தி.மு.க.வினர் நடத்திய முற்றுகை போராட்டத்தினால் தடாகம் சாலை, அவினாசிலிங்கம் கல்லூரி சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story