வருவாய்த்துறையினர் கெடுபிடி: நிலத்தை அபகரித்து விடுவார்கள் என பயந்து தொழிலாளி தற்கொலை


வருவாய்த்துறையினர் கெடுபிடி: நிலத்தை அபகரித்து விடுவார்கள் என பயந்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2020 3:45 PM GMT (Updated: 16 Oct 2020 4:31 PM GMT)

வருவாய்த்துறையினர் நிலத்தை அபகரித்து விடுவார்களோ என பயந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே காரியாங்கோணம் காற்றாடி பொற்றை பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (வயது 43), தொழிலாளி. இவருடைய மனைவி ரோஸ்மேரி (42). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கணபதி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அருகில் உள்ள நிலத்தை வேறொரு நபரிடம் இருந்து வாங்கி அதில் தோட்டப் பயிரிட்டும், ஆடு, கோழிகளை வளர்த்தும் வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் வருவாய்த்துறையினர் சிலர் கணபதி பயன்படுத்தும் நிலத்தை வந்து ஆய்வு செய்ததாக தெரிகிறது.

அப்போது, அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தக்கூடாது என கெடுபிடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், தான் விலை கொடுத்து வாங்கிய நிலத்தை வருவாய்த்துறையினர் அபகரித்து விடுவார்களோ என கணபதி பயந்ததோடு, மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கணபதி விஷம் குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ரோஸ்மேரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர் நிலத்தை அபகரித்து விடுவார்களோ என பயந்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story