பெங்களூருவில், மதுபான விடுதி உரிமையாளர் சுட்டுக்கொலை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு


பெங்களூருவில், மதுபான விடுதி உரிமையாளர் சுட்டுக்கொலை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 9:44 PM GMT (Updated: 16 Oct 2020 9:44 PM GMT)

பெங்களூருவில் மதுபான விடுதி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கு பழி தீர்க்க அவர் தீர்த்து கட்டப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்தவர் மணீஷ் ஷெட்டி (வயது 45) . இவர், பெங்களூருவில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்தார். பிரிகேட் ரோடு அருகே எஸ்.எச்.பி. ரோட்டில் மதுபான விடுதியை மணீஷ் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மதுபான விடுதியின் முன்பாக செல்போனில் பேசியபடி நின்ற மணீசை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் மணீஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரவிபூஜாரியின் கூட்டாளி

குறிப்பாக மணீசை கொலை செய்ய வந்த மர்மநபர்கள், மதுபான விடுதி அருகேயே தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள், ஹெல்மெட்டுகளை விட்டு சென்றிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி, அது யாருக்கு சேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுபான விடுதி நடத்தி வந்த மணீஷ், இதற்கு முன்பு ரவுடியாக இருந்து வந்ததும் தெரியவந்தது. அதாவது நிழல் உலக தாதா ரவி பூஜாரி மற்றும் பன்னச்சே ராஜனிடம் கூட்டாளியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

அவர்களுடன் சேர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் மணீஷ் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக அவர் மீது மங்களூருவில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதையடுத்து, ஒரு தனிப்படை போலீசார் மங்களூருவுக்கு சென்றுள்ளனர். அவர் மீதுள்ள வழக்குகள், எதிரிகள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மற்றொரு தனிப்படை போலீசார், மணீசின் சொந்த ஊரான சிக்கமகளூரு மாவட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேமராக்கள் ஆய்வு

இதற்கிடையில், மணீசின் மதுபான விடுதி அமைந்துள்ள எஸ்.எச்.பி. ரோடு, பிரிகேட் ரோடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றியும் ஒரு தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மற்றொரு தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். கொலையான மணீஷ் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததுடன், நிழல் உலக தாதா ரவிபூஜாரியுடன் தொடர்பில் இருந்தவர் என்பதால், எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடிகள் முன்விரோதம் காரணமாக, அவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மங்களூருவை சேர்ந்த கும்பலினரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். ஏனெனில் உடுப்பில் கிஷன் ஹெக்டே என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருந்தார். இதில், மணீசுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதற்கு பழிக்கு பழியாக ரவுடி விக்கி ஷெட்டி, அவரது கூட்டாளிகள் மணீசை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் மணீஷ் கொலை வழக்கில் முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும், கூடிய விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் தெரிவித்துள்ளார்.

Next Story