போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போலி டாக்டர் கைது


போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2020 6:58 AM IST (Updated: 18 Oct 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து விட்டு 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போலி டாக்டர் கைதானார்.

பூந்தமல்லி,

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 41). இவர், கடந்த 2018-ம் ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவ கவுன்சிலில் டாக்டருக்கு படித்துள்ளதாக கூறி சான்றிதழ்களை கொண்டு பதிவு செய்துவிட்டு சென்றார். பின்னர் அந்த சான்றிதழ்களை பரிசோதித்து பார்க்கும்போது அவை போலியான சான்றிதழ் என தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவ கவுன்சிலில் இருந்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயபாண்டியை கைது செய்ய கரூர் விரைந்தனர். ஆனால் அங்கு ஜெயபாண்டி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் சுமார் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போலி டாக்டர் ஜெயபாண்டி நேற்றுமுன் தினம் ஆவடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருவதாக அரும்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஆவடிக்கு வந்து விட்டு கரூர் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போலி டாக்டர் ஜெயபாண்டியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீசாரிடம் ஜெயபாண்டி கூறியதாவது:-

மருத்துவ சீட் வாங்குவதற்காக திருச்சியை சேர்ந்த சிலரிடம் நான் ரூ.25 லட்சம் கொடுத்தேன். அவர்கள் கொடுத்த சான்றிதழை கொண்டு வந்து பதிவு செய்தேன். அதன் பின்புதான் போலியான சான்றிதழ் என தெரியவந்ததால் தலைமறைவாகி விட்டேன்.

அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளிவரும். இதுவரை 16 பேரிடம் இதுபோல் அவர்கள் பணம் வாங்கி கொண்டு போலி சான்றிதழ் கொடுத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கைதான ஜெயபாண்டியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story