ஆதார் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உரம் வினியோகம் செய்ய வேண்டும் - கலெக்டர் கண்ணன் அறிவிப்பு


ஆதார் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உரம் வினியோகம் செய்ய வேண்டும் - கலெக்டர் கண்ணன் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2020 3:45 AM IST (Updated: 18 Oct 2020 2:20 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உரக்கடைகளில் உரம் வினியோகம் செய்ய வேண்டும் என கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பயிர் சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள 21 மொத்த உர விற்பனை நிலையங்களில் 134 சில்லறை உர விற்பனை நிலையங்கள், 184 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்சாகுபடிக்கான யூரியா 105 மெட்ரிக்டன், டி.ஏ.பி. 110 மெட்ரிக்டன், எம்.ஓ.பி. 893 மெட்ரிக்டன், காம்ப்ளக்ஸ் 1912 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரம் வாங்க செல்லும் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையினை அவசியம் கொண்டு சென்று உரமூடையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் பட்டியல் இடப்பட்டு, ரசீதுபெற்று உரம் வாங்கி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

யூரியா உரம் 45 கிலோ மூடை ஒன்றுக்கு தோராயமாக ரூ.1100 மானியமாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆகவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான யூரியா உரத்தினை சாகுபடி செய்யும் இடத்தின் பரப்பு மற்றும் பயிரின் தேவைக்கு மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதிகபடியாக யூரியா பெறும் தனிநபர் மற்றும் வினியோகம் செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மண்வள அட்டை வேளாண்துறை மூலம் வழங்கப்படும்.

மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவை கொண்டு சமச்சீராக உரங்கள் இடுவதன்மூலம் தேவைக்கு அதிகமாக உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். மண்வளத்தையும் பாதுகாக்க முடியும்.

பதுக்கல், கட்டுப்பாடு, முறைகேடு போன்ற குறைகளை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும். விவசாயிகள் அனைவரும் தங்களது மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள உர பரிந்துரையின் படி உரங்கள் இடவேண்டும்.

மொத்த உர விற்பனையாளர்கள் மாவட்டத்திற்கு வெளியே உள்ள மொத்தம் மற்றும் சில்லறை உர விற்பனையாளர்களுக்கு மானிய விலை உரங்களை மாறுதல் செய்தாலோ, செயற்கை முறையில் உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தினாலோ உரக்கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவற்றின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story