பிவண்டியில் செல்போன் திருடிய வாலிபர் அடித்துக்கொலை குடோன் உரிமையாளர் உள்பட 6 பேர் கைது


பிவண்டியில் செல்போன் திருடிய வாலிபர் அடித்துக்கொலை குடோன் உரிமையாளர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2020 2:06 AM IST (Updated: 19 Oct 2020 2:06 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் செல்போன் திருடிய வாலிபரை அடித்து கொன்ற குடோன் உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

தானே மாவட்டம் பிவண்டி வால்பாடா பகுதியில் பிரசாந்த் காம்ப்ளக்ஸ் பகுதியில் குணால் தோஷி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஊழியர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மர்ம நபர் ஒருவர் குடோனுக்குள் நுழைந்தார்.

பின்னர் அவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்களின் செல்போன்களை நைசாக திருடினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற போது, மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இந்த சத்தம்கேட்டு குடோன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது, தங்களுடைய செல்போன்களை அந்த நபர் திருடிச்சென்றதை அறிந்து அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அந்த நபர் படுகாயம் அடைந்தார்.

6 பேர் கைது

பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.இதைத்தொடர்ந்து அவரை அடித்து கொலை செய்ததாக குடோன் உரிமையாளர் மற்றும் 5 ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பெயர் பரத் சாய் என்பது தெரியவந்துள்ளது.

Next Story