காரைக்கால் பாரதியார் வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


காரைக்கால் பாரதியார் வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2020 11:03 PM GMT (Updated: 19 Oct 2020 11:03 PM GMT)

காரைக்கால் பாரதியார் வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி, மாதா கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக வணிகர்கள், தங்கள் கடைகளின் முன்பு விளம்பர பலகைகள், தடுப்பு கம்பிகள் போன்றவற்றால் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதன்பேரில் பல மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் தீவிர ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டது. இதற்கு, அரசியல் கட்சிகள், வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்ததால், வணிகர்களோடு கலந்துபேசி, அகற்ற வேண்டிய நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து எல்லைகோடுகள் வரையப்பட்டது. இதையடுத்து பல வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர்.

அதிகாரிகள் எச்சரிக்கை

இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் புகார் மனுக்கள் சென்றது. கலெக்டர் அர்ஜூன்சர்மா உத்தரவின்பேரில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் மின்துறையினர் மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நேற்று பாரதியார் வீதிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த விளம்பர பலகை, தடுப்பு கம்பிகளை அகற்றினர். பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளவர்கள் ஒருசில நாட்களில் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ளவேண்டும், இல்லையென்றால் மாவட்ட நிர்வாகமே ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story