பெங்களூருவில் இந்திய விமானப்படை முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி மரணம்


பெங்களூருவில் இந்திய விமானப்படை முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி மரணம்
x
தினத்தந்தி 21 Oct 2020 10:15 PM GMT (Updated: 21 Oct 2020 10:15 PM GMT)

பெங்களூருவில், இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி மரணம் அடைந்தார்.

பெங்களூரு,

இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கு உரியவர் விஜயலட்சுமி. வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயலட்சுமி பெங்களூருவில் உள்ள தனது மகளின் வீட்டில் இறந்தார். அவருக்கு வயது 96. கடந்த 1924-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஜயலட்சுமி பிறந்தார்.

மருத்துவ படிப்பை முடித்த பின்னர், ராணுவ மருத்துவ படையில் 1955-ம் ஆண்டு விஜயலட்சுமி சேர்ந்து இருந்தார். பின்னர் அவர் இந்திய விமானப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து பல்வேறு விமானப்படை மருத்துவமனைகளில் விஜயலட்சுமி மகப்பேறு மருத்துவராக பணியாற்றினார். மேலும் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கும் விஜயலட்சுமி மருத்துவ சிகிச்சை அளித்து இருந்தார்.

முதல் பெண் அதிகாரி

இதையடுத்து கடந்த 1972-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விங் கமாண்டராக விஜயலட்சுமி பதவி ஏற்றார். விமானப்படையில் அதிகாரியாக பதவி ஏற்ற முதல் பெண் விஜயலட்சுமி ஆவார். பின்னர் சிறந்த சேவைக்காக 1997-ம் ஆண்டு விஷித் சேவா விருதை பெற்ற விஜயலட்சுமி, கடந்த 1979-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.

இளம் வயதிலேயே அனைத்து இந்திய வானொலியில் கலைஞராக பணியாற்றிய விஜயலட்சுமி, கர்நாடக இசையையும் பயிற்றுவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமியின் கணவர் ரமணனும் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார்.

Next Story