மாவட்ட செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் முளைத்த நெல்லை கண்ணீருடன் காயவைக்கும் விவசாயிகள் + "||" + Paddy germinated in Thirukattupalli areas Farmers drying with tears

திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் முளைத்த நெல்லை கண்ணீருடன் காயவைக்கும் விவசாயிகள்

திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் முளைத்த நெல்லை கண்ணீருடன் காயவைக்கும் விவசாயிகள்
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் முளைத்த நெல்லை விவசாயிகள் கண்ணீருடன் காய வைத்து வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாமல் காணப்படுகிறது. வெயில் அதிகமாக அடிக்காமல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கால்வாய் பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது முழுவீச்சில் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விற்பனைக்காக வைத்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் இடம் இல்லாமல் புதிதாக கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையை உணர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூடுதலாக லாரிகளில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை எடுத்து சென்று வருகின்றனர். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இருப்பதால் நெல் மூட்டைகளை எடுத்து செல்ல லாரிகள் வந்தால் கொள்முதல் பணிகள் பாதிக்கப்படுகிறது. காத்திருக்கும் விவசாயிகள் கொள்முதல் செய்யப்படும் என்று காத்திருந்து ஏமாந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டித் தீர்த்த மழையால் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் முளைத்து காணப்பட்டன. முளைத்துப் போன நெல்லை தனியாக பிரித்து விவசாயிகள் சாலையில் கொட்டி வேதனையுடன் காய வைத்து வருகிறார்கள்.

முளைத்த நெல்லை காயவைத்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். பாடுபட்டு விளைவித்த நெல்லை விற்க முடியாமல் மழையில் நனைந்து வீணாகி விட்டதே என்று வேதனையில் காய வைத்து வருகிறார்கள்.

தொடர்ந்து மழை இல்லாத நிலை காணப்படும் சூழ்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் விரைவு நடவடிக்கை எடுத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.